சவுக்கு சங்கரை செருப்பால் அடிக்க பாய்ந்த பெண்கள்; நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு..

By 
sav1

பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுக மகளிரணி நிர்வாகிகள் தங்கள் காலணியை காண்பித்து சவுக்கு சங்கரை தாக்க முயன்றனர்.

பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை அதிகாரிகள் குறித்தும் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மிகவும் நெருக்கமான சிலர் கைது செய்யப்பட்டனர்.

அந்த வரிசைகயில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்து வரும் வழியில், காவல் துறையினரின் வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயத்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார். இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட கோவை மாவட்ட திமுக மகளிரணி நிர்வாகிகள் சிலர் நீதிமன்ற வாசலில் காத்திருந்தனர்.

சவுக்கு சங்கருடன் வந்த காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள், தாங்கள் அணிந்திருந்த காலணியை கையில் எடுத்துக் கொண்டு அவரை நோக்கி ஆவேசமாக அடிக்க பாய்ந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

Share this story