அ.தி.மு.க.வில் ஓபிஎஸ்சை சேர்க்க வலியுறுத்துவீர்களா? : அமித்ஷா பதில்

By 
sha3

அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜனதா தலையிட விரும்பவில்லை எனவும், அது அவர்களது உள்கட்சி விவகாரம் எனவும், கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.சை சேர்க்க நாங்கள் வலியுறுத்த மாட்டோம். அது அக்கட்சியின் விவகாரம் ஆகும்.

அவர்கள் இருவருமே தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு கட்சியின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே விரும்பியது இல்லை. அதனை தரக்குறைவான செயலாகவே கருதுகிறோம்.

அந்த வகையில் ஓ.பி.எஸ். விவகாரத்தில் அ.தி.மு.க.வினர்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

இதன் மூலம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேரும் விவகாரத்தில் ஓ.பி.எஸ்.ஐ பா.ஜனதா கைவிட்டு விட்டது உறுதியாகி இருக்கிறது. இதன் காரணமாக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஓ.பி.எஸ். விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமித்ஷாவின் பேட்டி, எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும் வக்கீலுமான சேலம் மணிகண்டன் கூறும்போது, 'ஆரம்பத்தில் இருந்தே நான் இந்த கருத்தைதான் தொடர்ந்து கூறி வந்தேன். பா.ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது பெரிய நம்பிக்கை வைத்து உள்ளனர். ஓ.பி.எஸ்.ஐ சேர்க்காமலேயே நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை அ.தி.மு.க. தலைவர்கள் எடுத்து கூறி இருக்கிறார்கள்.

தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. முழுமையாக வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பேசப்படும் என்றார். இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகி இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

 

Share this story