'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு இயக்கம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By 
'Yellow Again' Awareness Movement Launched by Chief Minister Stalin

‘பிளாஸ்டிக்’ பயன்பாட்டினால் நாளுக்கு நாள் பூமி அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடல்வாழ் உயிரினங்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய மாசு ஏற்படுத்துகிறது.
 
ஒரு பிளாஸ்டிக் பை, மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள்தான். ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும்.

இதனால், ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

ஆனாலும், பல கடைகளில் இன்னும் பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் கடை கடையாகச் சென்று சோதனை நடத்தி பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர். அபராதமும் விதித்தனர்.

ஆனால், வியாபாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், இதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. 

வியாபாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும், பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் புழக்கத்தில்தான் உள்ளது. 

விழிப்புணர்வு :

இந்த காலகட்டத்தில் கொரோனா பரவியதால், பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது.

இப்போது, பிளாஸ்டிக் தடையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.

இதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில், இதற்கான நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. 

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

மக்களின் பார்வைக்கு :

அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப் படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் இந்த கண்காட்சியை வந்து பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்று பேசினார்கள்.

Share this story