பாலியல் குற்றச்சாட்டு குறித்து, வீராங்கனைகளின் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் : பாஜக தலைவர் பபிதா போகத்

By 
babi

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பபிதா போகத் பேசும்போது, 'நான் முதலில் மல்யுத்த வீராங்கனை. மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு உள்ளது. இன்றே நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வேன். மேலும் நான் ஒரு மல்யுத்த வீராங்கனை மட்டுமல்லாமல் அரசாங்கத்திலும் இருக்கிறேன், எனவே மத்தியஸ்தம் செய்வது எனது பொறுப்பு.

நான் போட்டிகளில் பங்கேற்ற காலத்திலும் இதுபோன்று பாலியல் அத்துமீறல் தொடர்பான சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நெருப்பில்லாமல் புகையாது. எனவே, வீராங்கனைகளின் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்றார்.

மல்யுத்த வீராங்கனைகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this story