முகம்மது ஷமி உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது; ஜனாதிபதி வழங்கினார்..முழு விவரம்..

By 
17

பிரபல கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி உள்பட 17 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருது அர்ஜுனா விருது. கடந்த 4 ஆண்டுகளில் வீரர் - வீராங்கனைகள் வெளிப்படுத்திய ஆட்டத் திறமை, தலைமைப்பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது பெற்றோர் பட்டியல்: அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது முகம்மது ஷமி (கிரிக்கெட்), அஜய் ரெட்டி (பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட்), ஓஜாஸ் பிரவின் தியோடேல் (வில்வித்தை), அதிதி கோபிசந்த் ஸ்வாமி (வில்வித்தை), ஷீத்தல் தேவி (மாற்றுத்திறனாளி வில்வித்தை), பருள் சவுத்ரி (தடகளம்), ஸ்ரீஷங்கர் (தடகளம்), முகம்மது ஹூஸ்ஸாமுதின் (குத்துச்சண்டை), வைஷாலி (செஸ்), திவ்யகிரிதி சிங் (குதிரையேற்றம்), அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்),

தீக்‌ஷா தாகர் (கோல்ஃப்), கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி), சுசிலா சானு (ஹாக்கி), பிங்கி(Lawn ball), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கிச்சுடுதல்), அந்திம் பங்கல் (மல்யுத்தம்), அய்ஷிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்) ஆகியோருக்கு இன்று வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 17 பேருக்கும் அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

முகம்மது ஷமி பேட்டி: முன்னதாக, அர்ஜுனா விருது பெற இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகம்மது ஷமி, “இந்த விருது எனது கனவு. விளையாட்டுத் துறையில் இருந்த பலருக்கு இந்த விருது கிடைக்கவில்லை. இந்த விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்நாளில் பலர் இந்த விருதை பெற்றதை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம், அர்ஜுனா விருதை நாமும் பெற வேண்டும் என கனவு கண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்த விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மூன்று பேருக்கு வழங்கினார். மஞ்சுஷா கன்வார்(பேட்மிண்டன்), வினீத் குமார் ஷர்மா(ஹாக்கி), கவிதா செல்வராஜ்(கபடி) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றனர்.

நிலம், கடல் மற்றும் வான்வெளியில் சிறந்த சாகசங்கள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது, 3 பேருக்கு வழங்கப்பட்டது. தண்ணீரில் சாகசம் புரிந்ததற்காக துலசி சைதன்யா மோதுகுரிக்கும், வான் சாகசத்திற்காக அன்ஷூ குமார் திவாரிக்கும், நிலத்தில் சாகசம் செய்ததற்காக பர்வீன் சிங்குக்கும் இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக பங்களித்த பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது ஜெயின் பல்கலைக்கழகம், ஒடிசா மைனிங் கார்பரேஷன் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது. மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை, அம்ரித்சரில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தக்கு வழங்கப்பட்டது.

Share this story