20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று மோதல்; கேப்டன் வில்லியம்சன் கருத்து..

By 
willi

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று மோதுகின்றன. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

ஆனால் சிட்னியில் தற்போது விளையாட்டுக்கு உகந்த சீதோஷ்ண நிலை இல்லை. சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அது, நேற்று வீரர்களின் பயிற்சிலும் சற்று பாதிப்பை ஏற்படுத்தியது. போட்டிக்குரிய இன்றைய தினமும் சிட்னியில் கன மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த ஆட்டம் ரத்தாகலாம் அல்லது குறைந்த ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படலாம். வில்லியம்சன் கருத்து மழை அச்சுறுத்திக்கொண்டிருப்பதால் இரு அணிகளும் தங்களது ஆடும் லெவன் பட்டியலை வெளியிடவில்லை.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'கைவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் தவிர மற்ற அனைவரும் போதுமான உடல்தகுதியுடன் உள்ளனர். நாங்கள் இன்னும் சிட்னி ஆடுகளத்தை பார்க்கவில்லை. ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. களம் காணும் லெவன் அணியை முன்கூட்டியே அறிவிக்கமாட்டோம்.

ஏனெனில் ஆட்டத்தில் ஓவர் குறைக்கப்பட்டால் அதற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும்' என்றார்.

தனது அண்டை நாடான ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி 2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்த வடிவிலான போட்டியிலும் வீழ்த்தியதில்லை. இது குறித்து வில்லியம்சனிடம் கேட்ட போது, 'இது போன்ற புள்ளி விவரங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் முயற்சியை தடுக்கப்போவதில்லை. எங்கள் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் உள்ளனர். கடும் சவால் அளிப்பதை எதிர்நோக்கி இருக்கிறோம்' என்றார்.

நியூசிலாந்து அணியில் டிவான் கான்வேவுடன் பின் ஆலென் அல்லது மார்ட்டின் கப்தில் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார்கள்.

மிடில் வரிசையில் கேப்டன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, பெர்குசன், சோதி நம்பிக்கை அளிக்கிறார்கள்.

Share this story