அரைஇறுதியில் 4 அணிகள் நுழையும் : கங்குலி கணிப்பு

ganguly3

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது பற்றி முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான கங்குலி கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது பற்றி விவாதிப்பதில் அர்த்த மில்லை. 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

ஆனால் போட்டி முற்றிலும் மாறுபட்டது. 20 ஓவர் போட்டி முடிவு கணிக்க முடியாததாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த அணியும் யாரையும் வீழ்த்த முடியும். ஏற்கனவே சில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் வெளியேறி இருந்தது. இந்திய அணியை பொறுத்த வரை சிறந்த அதிரடி வீரர்கள் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். என்னை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மைதானங்களில் அவர்கள் சிறப்பாக வீசுவார்கள். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

Share this story