பிபா கால்பந்து அமைப்புக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை
 

fifa

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததை காரணம் காட்டி, அதன் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 

இதனால், வெளிநாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில், இந்திய அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாக, கேரளா எப்சி அணி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளது. 

ஈரானைச் சேர்ந்த ஒரு அணியுடனும், மற்றொரு அணியுடனும் வரும் 23, 26 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளது. 

இதேபோல, ஏடிகே மோகன் பஹான் அணி செப்டம்பர் 7-ந் தேதி பஹ்ரைனில் ஆசிய கால்பந்து சம்மேளன போட்டியில் விளையாடவுள்ளது. 

இந்த விவரத்தை சுட்டிக்காட்டி, இந்த அணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

மேலும், உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Share this story