கிரிக்கெட் ராஜ்ஜியம் : பும்ராவை விட, வரலாற்று சாதனை படைத்தார் புவனேஷ் குமார்..

By 
puvanesh

ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தது. அக்டோபர் 27-ம் தேதியன்று 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், அக்சர் படேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

குறிப்பாக தன்னுடைய முதல் 2 ஓவர்களில் 1 ரன் கூட கொடுக்காமல் அடுத்தடுத்த மெய்டன் ஓவர்களாக வீசிய அவர் மொத்தமாக வீசிய 3 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

போட்டியில் அவர் வீசிய 2 மெய்டன் ஓவர்களையும் சேர்த்து இந்த வருடம் 5 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்: 1. புவனேஸ்வர் குமார் : 5* (2022) 2. ஜஸ்பிரித் பும்ரா : 4 (2014) 3. ரிச்சர்ட் ங்கரவா : 4 (2021) அத்துடன் அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்தார்.

அந்த பட்டியல்: 1. புவனேஸ்வர் குமார் : 20* 2. ஜஸ்பிரித் பும்ரா : 19 3. பிரவீன் குமார் : 19 4. ஹர்பஜன் சிங் : 13 5. இர்பான் பதான் : 13

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் 1000 பந்துகளை வீசிய முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே அதுவும் 500+ பந்துகளை மட்டுமே வீசியுள்ளார்.

Share this story