தல போல வருமா? : டோனிக்கு, கம்பீர் புகழாரம்

thala

டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய அணி படுதோல்வியடைந்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.

அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்தியா டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் செல்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஐசிசி தொடரில் போட்டிகளில் டோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. அதன் பின்னர், ஐசிசி தொடரில் இந்திய அணி இதுவரை எந்த வித கோப்பையையும் வெல்லவில்லை.

இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் படுதோல்வியடைந்தது குறித்து இந்தியா அணியை முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோயை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக, ஸ்டார்ஸ் போர்ட்ஸ் நிகழ்ச்சியின் போது பேசிய கம்பீர்,

'யாரேனும் ஒருவர் வந்து ரோகித் சர்மா அடித்த இரட்டை சதங்களை விட, அதிக இரட்டை சதங்கள் அடிக்கலாம். யாரேனும் வந்து கோலி அடித்ததை விட, அதிக சதங்கள் அடிக்கலாம். ஆனால், 3 ஐசிசி கோப்பைகளை (டோனியை தவிர) எந்த இந்திய கேப்டன்களாலும் வெற்றிபெற முடியாது என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

பேட்டியின்போது டோனியின் பெயரை கவுதம் கம்பீர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது.

அதில், 2007 டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் கவுதம் கம்பீர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story