'அவர்தான்' வெற்றியை நோக்கி திருப்புமுனையை ஏற்படுத்தினார் : ரோகித் பாராட்டு யாருக்கு தெரியுமா?

rohit654

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக நுவானிது பெர்னாண்டோ 50 ரன்னும், குசல் மென்டிஸ் 34 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 86 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அதன் பின் லோகேஷ் ராகுல் (64ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (36ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

இந்த போட்டி நெருக்கமான விளையாட்டாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டுகள் நிறைய கற்று கொடுக்கிறது. லோகேஷ் ராகுல் நீண்ட காலமாக 5-வது வரிசையில் விளையாடி வருகிறார்.

அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது. தொடக்க வரிசையில் ஒரு இடது கை ஆட்டக்காரர் இருப்பது நன்றாக இருக்கும். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த ஒரு வருடத்தில் நிறைய ரன்களை எடுத்துள்ளனர்.

நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் எங்கள் வலது கை பேட்ஸ்மேன்களின் தரம் எங்களுக்கு தெரியும். 3-வது ஒரு நாள் போட்டிக்கான ஆடுகளத்தை பார்ப்போம். மேலும் மற்றொரு ஒருநாள் தொடரும் வர உள்ளது. எனவே ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா என்று பார்ப்போம்.

இப்போட்டியில் குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் அவர் ஒரு பந்து வீச்சாளராக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இது அணிக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story