ரோகித் சர்மா - விராட் கோலி பார்ம் எப்படி? : பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி

pcci3

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா (14 ஆட்டத்தில் 268 ரன்), விராட் கோலி (14 ஆட்டத்தில் 309 ரன்) ஆகியோரின் பேட்டிங் மெச்சும்படி இல்லையே என்று கேட்கிறீர்கள். எல்லோரும் மனிதர்கள் தானே. 

தவறுகள் வரத் தான் செய்யும். ஆனால், கேப்டனாக ரோகித் சர்மாவின் செயல்பாடு பிரமிப்பானது. 

ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்றுள்ளார். அவரது தலைமையில் இந்தியா ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. 

கேப்டனாக இருந்த போட்டிகளில் எல்லாம் சாதித்துக் காட்டி இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் அவரது சாதனை மகத்தானது. 

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சிறந்த வீரர்கள். நிறைய கிரிக்கெட் விளையாடிய அனுபவசாலிகள். நிச்சயம் ரன் குவிப்பார்கள். 

விராட் கோலி ஐ.பி.எல்.-ல் கடந்த ஆட்டத்தில் நன்றாக ஆடி அரைசதம் அடித்தார். அத்துடன் பெங்களூரு அணி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்ததால் அவர் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளானார். 

விரைவில், அவர்கள் தங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். எனவே, அவர்களது பார்ம் குறித்து கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. 

அதிவேகமாக பந்து வீசக்கூடிய உம்ரான் மாலிக் முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். அவரது எதிர்காலம் அவரது கையில் தான் உள்ளது. 

அதாவது முழு உடல்தகுதியுடன், இதே வேகத்தில் தொடர்ந்து பந்து வீசினால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும். இந்த ஐ.பி.எல்.-ல் நிறைய வீரர்கள் நன்றாக விளையாடியுள்ளனர். 

திலக் வர்மா (மும்பை), ராகுல் திரிபாதி (ஐதராபாத்), ராகுல் திவேதியா (குஜராத்), உம்ரான் மாலிக் (ஐதராபாத்), மொசின் கான் (லக்னோ), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்), அவேஷ் கான் (லக்னோ) உள்ளிட்டோர் கவனத்தை ஈர்த்துள்ளனர்' என்றார்.
*

Share this story