இதை சொல்வதில், எனக்கு வருத்தமாக இருக்கிறது : டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்
 

By 
rafeal1

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, லண்டனில் நடந்து வருகிறது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. 

சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். 

இன்றைய மோதல் :

இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார். 

இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த நடால் கூறும்போது, 'துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. 

காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். 

அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். 

எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. 

இதை சொல்வதில், எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. 

சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல, சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால். 

இறுதிப்போட்டிக்கு தகுதி :

ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். 

இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story