எனது மோசமான ஆட்டத்தால் சக வீரர்களையும் ஏமாற்றிவிட்டேன் : கேப்டன் நிகோலஸ் பூரன்

pooran

டி20 உலகக் கோப்பை முதல் சுற்று லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது.

டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பேசும்போது,

'தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். 'நாங்கள் எங்கள் ரசிகர்களையும் எங்களையும் ஏமாற்றிவிட்டோம். இந்த தோல்வி வேதனை அளிக்கிறது.

நான் எனது மோசமான ஆட்டத்தால் சக வீரர்களையும் ஏமாற்றிவிட்டேன். இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 145 ரன்கள் எடுத்தால், அடுத்து அந்த ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாகும். அது ஒரு சவாலாகவும் இருக்கும்' என்றார்

பூரன். மேலும், சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்த பூரன், அந்த அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். அயர்லாந்திடம் அடைந்த தோல்வி தங்களுக்கு ஒரு கற்றல் அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this story