ஐபிஎல் டுடே : சென்னை அணியை கவிழ்த்தியது குஜராத் : ஆடுகளம் விவரம்..

By 
csk3

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக எதிர்பார்ப்புக்கு உள்ளானது.

இதில், சிஎஸ்கேவுக்கு, எதிராக, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. 

ஆடிய ஆட்டம் :

டாஸ் வென்ற குஜராத் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.  

மறுமுனையில் உத்தப்பா (3 ரன்), மொயீன் அலி (1 ரன்) விரைவில் விக்கெட்டை இழந்தாலும், 4-வது வீரராக களமிறங்கிய அம்பதி ராயுடு, கெய்க்வாட்டுடன் இணைந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 

இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டனர்.
 
அம்பதி ராயுடு 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அரைசதம் கடந்து முன்னேறிய கெய்க்வாட் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். 

48 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் விளாசினார். 

அதன் பின்னர், சிவம் துபே 19 ரன், கேப்டன் ஜடேஜா 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 

குஜராத் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி, யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

3 விக்கெட் :

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. 

அந்த அணியின் துவக்க வீரர் விருத்திமான் சகா 11 ரன்னுடனும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

விஜய் ஷங்கரும் ரன்  எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அபினவ் மனோகர் 12 ரன் எடுத்த நிலையில், அவுட்டானார். 

8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து குஜராத் அணி தத்தளித்தது. 

அடுத்து வந்த டேவிட் மில்லர், அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

51 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 94 ரன்கள் குவித்து, கடைசிவரை களத்தில் நின்றார். ரஷித்கான் 40 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து, 19.5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 170 ரன்கள் குவித்ததுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share this story