ஐபிஎல் திருப்பம் : அம்பதி-தவான் அதிரடி ஆட்டம்; ஆயினும் பஞ்சாப் வெற்றி பெற்றது எப்படி?

ஐபிஎல் ரகள : அம்பதி-தவான் அதிரடி ஆட்டம்; ஆயினும் பஞ்சாப் வெற்றி பெற்றது எப்படி?
*
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஷிகர் தவான் அசத்தல் :
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ஒரு ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய சாண்ட்னர் 8 ரன்னும், ஷிவம் டுபே 9 ரன்னில் அவுட்டாகினர். 40 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதிரடி அம்பதி்:
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு பொறுப்புடன் ஆடி, அரைசதமடித்தார். அவருக்கு கெய்க்வாட் ஒத்துழைப்பு கொடுத்தார்.
4-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ஜடேஜா, ராயுடுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால், அம்பதி ராயுடு அதிரடியில் இறங்கினார். கடைசி 5 ஓவரில் 70 ரன்கள் தேவைப்பட்டது.
16-வது ஓவரில் ராயுடு 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 23 ரன் கிடைத்தது. 17-வது ஓவரில் 6 ரன் கிடைத்தது. 18-வது ஓவரில் 6 ரன் எடுத்தனர்.
அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19-வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
4-வது வெற்றி :
இதனால், கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும்.