இந்தியா-தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் தொடர், சமனில் முடிந்தது : பிசிசிஐ அறிவிப்பு

By 
20over

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. 

இதில், முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. 

இந்த தொடரை கைப்பற்றப் போகும் அணி என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. 

கேப்டனாக பொறுப்பேற்பு :

முன்னதாக, தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா காயமடைந்துள்ளதால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். 

இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதன்படி, இந்திய அணி களம் இறங்கி பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. 

களம் இறங்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 10 ரன்னுடன் வெளியேறினார். 

சமன் :

இந்திய அணி 3.3 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. 

மழை நிற்காததால், போட்டி கைவிடப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. 

இதையடுத்து, இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story