இந்திய கிரிக்கெட் அணி, பழைய முறையை மாற்ற வேண்டும் : முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் 

By 
veeren

இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே மிகவும் பழைய ஃபார்முலாவை பயன்படுத்தி வருவதாக முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வங்கதேச அணியுடனான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2 - 0 என தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது.

இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியாவின் ஃபார்ம் மிக மோசமாக இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்ற இந்தியா, சீனியர்களுடன் விளையாடியும் வங்கதேசத்திடம் வீழ்ந்தது.

குறிப்பாக விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் ஏமாற்றியதால் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார்.

'சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய ஃபீல்டிங் செட்டப்களை கொண்டு வருவதில் இந்தியா பிரபலமாக உள்ளது. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் என்று வரும்போது இந்தியாவின் அணுகுமுறை மிக மிக பழமையானது. அனைவரும் முன்னேறி வரும் சூழலில் இந்தியா மட்டும் பழைய முறையிலேயே உள்ளது.

இங்கிலாந்தின் நடவடிக்கை 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பின்னர் அவர்களின் அணியில் பல கடினமான முடிவுகளை எடுத்தனர். இதனால் சில ஆண்டுகளிலேயே இங்கிலாந்து அணி நல்ல மாற்றங்களை கண்டது. எனவே இந்தியாவும் அது போன்ற கடின முடிவுகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் வந்ததில் இருந்து இந்தியா ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக 50 ஓவர் கிரிக்கெட்டிலும் பெரிய வெற்றிகளை பெறவில்லை. நமது தவறுகளில் இருந்து எதையுமே அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. எனவே உடனடியாக அணுகுமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " இந்தியா தூக்கத்தில் இருந்து கண்விழிக்க வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா- வங்கதேசம் இடையே அடுத்ததாக 3வது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 10ம் தேதியன்று சட்டோகிராம் நகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story