சர்வதேச சிலம்பப் போட்டி : 'பெரம்பலூர்' மாணவர்கள் தங்கம் வென்று மெகா சாதனை

By 
chilampattam

நேபாள இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு மன்றத்தின் 2-வது ஆண்டு இந்தோ-நேபாள சர்வதேச சாம்பியன் ஷிப் விளையாட்டு போட்டிகள் நேபாளம் நாட்டில், போக்ராவில் கடந்த 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற்றது. 

இதில், சிலம்பம் போட்டியில் இந்திய அணிக்காக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

ஒற்றை கம்பு சிலம்பம் சுற்றும் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த கண்ணனும், மாணவிகள் பிரிவில் அனிசாவும், 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இரூரை சேர்ந்த ஜெயவர்ஷினியும், 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் நாரணமங்கலத்தை சேர்ந்த சச்சினும், 

மாணவிகள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த அக்‌ஷராவும், 10 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த யோஹீத்தும், மாணவிகள் பிரிவில் யோகமித்ராவும் முதலிடத்தை பிடித்தனர்.

இதேபோல், இரட்டை கம்பு சிலம்பம் சுற்றும் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த சுஜனும், 12 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் நாரணமங்கலத்தை சேர்ந்த கவினும், மாணவிகள் பிரிவில் பெரம்பலூரை சோ்ந்த பவதர்ஷனாவும் முதலிடம் பிடித்தனர். 

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் கோப்பை, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்று சாதனை படைத்து, பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
*

Share this story