'அவரை' போல ஒரு வீரரை நான் பார்த்தது இல்லை : ரிக்கி பாண்டிங் புகழாரம் யாருக்கு தெரியுமா?

By 
ponting

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.

டி20 கிரிக்கெட்டில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களிலும் தடம் பதித்து வருகிறார். நியூசிலாந்து தொடரில் முழுமையாக வாய்ப்பை பெற்ற சூர்யகுமார் யாதவ், அடுத்த மாதம் வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை பார்த்ததே கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

ஆட்டத்தின் சிந்தனைகள், திறமைகளை வைத்து பார்த்தால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிட்டு, அடுத்த சவால்களுக்கு சென்றுவிடுகிறார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் செய்வதை போலவே நிறைய வீரர்கள் செய்ய முயற்சிப்பார்கள் என நான் கேள்விப்பட்டு வருகிறேன். இது கேட்பதற்கே எவ்வளவு நன்றாக உள்ளது. 360 டிகிரியிலும் அடிக்கிறார் என நாம் பேசி வருகிறோம்.

ஆனால் விக்கெட் கீப்பருக்கு பின்னால் அவர் அடிக்கும் சிக்ஸர்கள், ஃபைன் லெக் திசையில் அடிக்கும் ஷாட்கள் அவரின் பெயரை கூறும் அளவிற்கு உள்ளது.  சூர்யகுமார் 5 - 6 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார்.

ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், போன்று சூர்யகுமாரும் தரமான ஃபிட்னஸுடன் இருக்கிறார். இப்படியே இருந்தால் நிச்சயம் ஒரு அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்

Share this story