கடைசி டி20 கிரிக்கெட் போட்டி : 54 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி; ஆடுகள விவரம்.

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
கார்ட்னர் 32 பந்தில் 66 ரன்னும், கிரேஸ் ஹாரிஸ் 35 பந்தில் 64 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து அசத்தியது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தீப்தி ஷர்மா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 53 ரன்கள் எடுத்தார்.
மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரஹாம் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது அஷீக் கார்ட்னருக்கு வழங்கப்பட்டது.