டிராவிட்டுக்கு பதில், நெஹ்ராவை நியமிக்க வேண்டும் : ஹர்பஜன் சிங் கோரிக்கை
 

By 
harbhajan

ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 2-வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. 

குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியத்துடன் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். 

அதை விட கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக செய்த தேவையற்ற மாற்றங்கள் ஏற்கனவே அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது. 

இந்நிலையில், சீனியர் வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

கேப்டன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை நீங்கள் பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 

நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அவரிடம் கிரிக்கெட்டின் அபாரமான மூளை உள்ளது. 

ஆனால் ஒருவேளை அவரை நீங்கள் டி20 கிரிக்கெட்டின் பயிற்சிளராக நீக்காமல் போனால் குறைந்தபட்சம் அவருக்கு உதவி செய்வதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை தேர்வு செய்யுங்கள். 

அதிலும் ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். 

விரைவில் நீங்கள் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை வைத்திருப்பதால் அவர் இந்த நிலைமையில் சரியாக பொருந்தவர். அவரில்லை என்றாலும் சமீபத்தில் ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள். 

மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவரை விட சிறந்த தேர்வு யாரும் இருக்க முடியாது. 

டி20 அணியின் சிறந்த வீரரான அவரைப் போன்ற நிறைய பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.
*

Share this story