திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு 

olimpic

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும் வருகிறார்.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று 3 இடங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு திருச்சி வருகை தந்தார். அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து ரூ.79 கோடி மதிப்பீட்டில் 22,716 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த அரசு விழா மக்கள் நல விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்த நம் மாநில இளைஞர்களுக்கு உலக தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகடாமி உருவாக்கப்படும் என்று சட்டமன்ற பேரவையில் நான் அறிவித்திருந்தேன். அதில் ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என்பதை இந்த விழா மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு விழாவின் மூலமாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நேரடியாக பயனடைய கூடிய வகையில், நாம் அந்த விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். இந்த திராவிட அரசாங்கமானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்து வரக்கூடியது என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா.

பொருளாதாரத்தில் மேம்பட மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு வந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்று சொன்னதன் மூலமாக சமூக பொருளாதார வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியே தொழில்கள் தொடங்க வருவதற்கு இதன் மூலமாக பெண்களுடைய ஆளுமை வளர்ந்துள்ளது. உயர்கல்வி கற்க கல்லூரிக்கு வரக்கூடிய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலமாக பெண்கள் உயர் கல்வி கற்பது உயர்ந்துள்ளது. இந்த வரிசையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் வழங்கக்கூடிய விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதையும் நிறுத்தி விட்டார்கள். நாம் மீண்டும் 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 33 சமுதாய மகளிர் அமைப்புக்கு மணிமேகலை விருதும், 55 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

தமிழர் வாழ்வு, தமிழ்நாடு செழிக்க தொய்வின்றி செயலாற்றிக்கொண்டு இருக்கிறோம். தடங்கலின்றி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். திராவிட மாடல் கொள்கைப்படி எல்லாருக்கும், எல்லம் என்ற கருத்தியலின் அடிப்படையில் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. காலநிலை மாற்றத்தை அறிவதில் முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது. சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட்டி போட்டியை சென்னையில் நடத்தி இருக்கின்றோம்' என்றார்.

Share this story