வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு : 72 மணி நேரத்தில் பதிலளிக்க மத்திய அரசு உத்தரவு

sexual3

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்சி  மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பூனியா கூறும்போது,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதுபற்றி விளக்குவோம் என கூறினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பினரால் வீரர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்தபோது, மனதளவில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் என்னை கொடுமைப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் எனது வாழ்வை முடித்து கொள்ளலாம் என நான் நினைத்தேன். எந்தவொரு வீரர், வீராங்கனைக்கும் ஏதேனும் நடந்து விட்டால், அதற்கு தலைவரே பொறுப்பாவார். பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர்.

கூட்டமைப்புக்கு சாதகமுடன் நடந்து கொள்ளும் சில ஆண் பயிற்சியாளர்கள், பெண் பயிற்சியாளர்களிடம் தவறாக அணுகுகிறார்கள். அவர்கள் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அமைப்பின் தலைவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அவர்கள் (கூட்டமைப்பு) எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகின்றனர். எங்களை சுரண்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் போகும்போது, ஒரு பயிற்சியாளரோ, மருத்துவரோ உடன் வருவதில்லை. நாங்கள் இதுபற்றி கேட்டால் பதிலுக்கு மிரட்டப்படுகிறோம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால், போராட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எந்த வீரரையாவது கூட்டமைப்பு துன்புறுத்தியது என கூற யாரேனும் முன்னே இருக்கிறார்களா? என கேட்டார். அதன்பின் அவர் கூறும்போது, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி எதுவும் நடந்திருந்தால் தூக்கில் தொங்க தயார். வினேஷ் போகத்திடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர் ஏன் ஒலிம்பிக்கின்போது, நிறுவனத்தின் லோகோ (அடையாள சின்னம்) தெரியும்படியான உடையை அணிகிறார்?

அவர் போட்டியில் தோல்வி அடைந்தபோது கூட, நான் அவரை ஊக்கப்படுத்த மட்டுமே செய்தேன். பாலியல் துன்புறுத்தல் என்பது மிக பெரிய குற்றச்சாட்டு. எனது பெயர் இதில் இழுக்கப்பட்டு இருக்கும்போது, நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, இந்தியாவின் உச்சப்பட்ச தேசிய விளையாட்டு கழகம் என கூறப்படும் இந்திய விளையாட்டு கழகம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பிற வீரர், வீராங்கனைகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி அதில் வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் நடந்து வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு வழிவகுத்த விசயங்கள் மற்றும் காரணங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அதேவேளையில், 41 மல்யுத்த வீரர், வீராங்கனைகள், 13 பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும், மகளிர் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் லக்னோவில் ஜனவரி 18-ந்தேதி (நேற்று) தொடங்க இருந்தது. எனினும், இந்த விவகாரம் சூடு பிடித்ததும் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய விளையாட்டு கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, டெல்லி மகளிரணி தலைவர் ஸ்வாதி மாலிவல் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார்.

இந்திய மூவர்ண கொடியின் பெருமையை உயர செய்தவர்கள், நாட்டை மிக பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள் நீதி கேட்டு, ஒன்று கூடி, கடும் குளிரில் போராட்டம் நடத்தியது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this story