விராட்கோலி, கே.எல்.ராகுலை தாண்டி ஸ்ரேயாஸ் புதிய சாதனை..

record5

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பின்னர் மூன்றாவது வீரராக களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், மறுமுனையில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

இறுதியில் 102 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 82 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை முக்கியமான நேரத்தில் பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். அதன்படி இதுவரை இந்திய அணிக்காக 38 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 1534 ரன்களை 49 ரன்கள் சராசரி உடன் அடித்துள்ளார்.

அதோடு அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் :

இந்திய வீரர்களில் வெகுவிரைவாக 1500 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்தவர்கள் சாதனையில் முதல் இடத்தில் இருந்த கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ளி அவர் சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 1500 ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் கே.எல் ராகுல் 36 இன்னிங்ஸ்களில் முதலிடத்தில் இருந்த வேளையில் அதனை ஷ்ரேயாஸ் ஐயர் 34-இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார். இவர்கள் இருவரை தொடர்ந்து ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 38 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் மட்டும் ஸ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார். இதில் 6 அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story