டி20 கிரிக்கெட் டுடே : இலங்கை திணறல்; நியூசிலாந்து மிரட்டல்; அதிரடி விவரம்..

newz

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பின் ஆலென் மற்றும் கான்வே ஆகியோர் களம் இறங்கினர்.

நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் பின் ஆலென் 1 ரன், கான்வே 1 ரன், கேப்டன் வில்லியம்சன் 8 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நிசாங்கா 0, குசல் மெண்டிஸ் 4, தனஞ்ஜெயா 0, அசலங்கா 4, கருரத்ணே 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து கேப்டன் சனகா - ராஜபக்சா ஜோடி சிறுது நேரம் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர்.

ராஜபக்சா 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹசரங்கா 4, திக்‌ஷனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 65 ரன்னில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி 93 ரன்னில் 9-வது விக்கெட்டை பறிகொடுத்தது. சனகா 35 ரன்னில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதிப்படுத்தி விட்டது.
 

Share this story