டென்னிஸ் தர்பார் : அரைஇறுதிக்கு முன்னேறினர் இரு வீராங்கனைகள்; ஆடுகள விவரம்..

By 
gra

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவை எதிர் கொண்டார். இதில் இகா 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார்.

இந்த முறையும் அவரது முதல் அரையிறுதி கனவு கலைந்தது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா ( பெலாரஸ்)-கரோலினா பிளிஸ்கோவா ( செக் குடியரசு ) மோதினார்கள். இதில் ஷபலென்கா 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் 22-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

அவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஒன்ஸ் ஜாபியுர் (துனிசியா)-கரோலின் கார்சியா (பிரான்ஸ்) , இகாஸ்வியா டெக்-ஷபலென்கா மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 9-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா)-பிரான்செஸ் டியாபோ (அமெரிக்கா) மோதினார்கள். இதில் டியாபோ 7-6 (7-3), 7-6, (7-0), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

22-வது வரிசையில் உள்ள அவர் 4-வது சுற்றில் முன்னணி வீரரான ரபெல் நடாலை வீழ்த்தி இருந்தார். தற்போது ருப்லெவை தோற்கடித்து உள்ளார். டியாபோ முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

இதற்கு முன்பு 2019-ல் ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதி வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது. ரூப்லெவின் முதல் அரை இறுதி கனவு தகர்ந்தது. அவர் 6-வது தடவையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார். டியாபோ அரை இறுதியில் அல்காரஸ் (ஸ்பெயின்) அல்லது சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.

Share this story