நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி சூர்யகுமாருக்கு, விராட்கோலி மரியாதை : ஏன் தெரியுமா?

asia3

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், நடந்த ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.

சூர்யகுமார் யாதவ் (68 ரன், 26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி (59 ரன், 44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் அரைசதம் விளாசினர். இதில் சூர்யகுமார் கடைசி ஓவரில் 4 பிரமாதமான சிக்சர்களை அடித்து சிலிர்க்க வைத்தார்.

இன்னிங்ஸ் முடிந்ததும் பெவிலியன் நோக்கி திரும்பும்போது, விராட் கோலி நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி சூர்யகுமாருக்கு மரியாதை செய்தார். பின்னர் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோலி, தனது ஜூனியர் வீரரை பார்த்து தலைவணங்கிய வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகிறது.

வெற்றிக்கு பிறகு கோலியும், சூர்யகுமார் யாதவும் மைதானத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஜாலியாக கலந்துரையாடினர். அப்போது கோலி கூறுகையில், 'சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதம். இன்னொரு முனையில் நின்று கொண்டு அவரது பேட்டிங்கை பார்த்து ரசித்தேன்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது எங்கள் அணிக்கு எதிராகவோ அல்லது மற்ற அணிகளுக்கு எதிராகவோ அவர் இது போன்று ஆடுவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அவரது இன்னிங்சை மிக அருகாமையில் நின்று ரசித்தது இதுவே முதல் அனுபவமாகும்.

அவரது பேட்டிங்கை பார்த்து நான் முற்றிலும் திகைத்து போய் விட்டேன். இது போன்று தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஆட்டத்தின் போக்கை அவரால் மாற்ற முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

 

Share this story