பீல்டிங்கில் தவறு செய்து விட்டோம் : ஷிகர் தவான் கருத்து

By 
dhawan2

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 40 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 75 ரன்னும், கிளாஸ்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் (4 ரன்), சுப்மன் கில் (3), ருதுராஜ் கெய்க்வாட் (19), இஷான் கிஷன் (20) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஸ்ரேயாஸ் அய்யர்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது.

ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது. அதில் சாம்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்னே எடுத்தார். இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா 9 ரன் வித்தியாசத்தில் வென்றது. போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர். பீல்டிங் சிறப்பாக அமையவில்லை.

தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. வேகமும் இருந்தது. இதனால் 250 ரன் இலக்கு என்பது அதிகமானது என்று நினைத்தேன்.

பீல்டிங்கில் தவறு செய்ததால் சில ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கும் என்றார்.

சஞ்சு சாம்சன் கூறும் போது, நடு ஓவர்களில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி அதிக ரன் விட்டு கொடுத்தார். எனவே அவரை இலக்கு வைத்து விளையாடினேன்.

கடைசி ஓவரை ஷம்சி வீசுவார் என்று எங்களுக்கு தெரியும். கடைசி ஓவரில் 24 ரன் எடுக்க வேண்டி இருந்திருந்தால் அதில் நான்கு சிக்சர் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். இரண்டு ஷாட்களை அடிக்க தவறிவிட்டேன்.

அடுத்த முறை இன்னும் கடினமாக முயற்சி செய்வேன். ஆனால் எனது பங்களிப்பில் நான் திருப்தியடைந்தேன் என்றார்.

3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஆட்டம் வருகிற 9-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.

*

Share this story