ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேனை, இந்திய அணியில் சேர்க்காதது ஏன்? : கவாஸ்கர் ஆதங்கம்

By 
gavaskar1

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்று, இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. 

இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான அணி வருகிற 24- ந் தேதி அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது. முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் டூப்ளின் நகரில் நடக்கிறது. 

இந்திய அணியினரின் விளையாட்டு திறனை நேரில் பார்வையிடுவதற்காக, தேர்வுக் குழு தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீரருமான சேட்டன் சர்மாவும் வீரர்களோடு செல்கிறார். 

ஓய்வு :

தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடிய ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்த தொடரில் ஆடவில்லை. காயத்தில் இருந்து குணமடையாததால் லோகேஷ் ராகுலும் ஆடவில்லை. 

இதனால், அயர்லாந்து பயணத்துக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பல்வேறு வெற்றிகள் :

இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திவேதியாவை சேர்த்து இருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

ராகுல் திவேதியா ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய வீரர்களில் ஒருவராக உள்ளார். 

இதனால், அயர்லாந்து தொடரில் அவரை சேர்த்து இருக்க வேண்டும். அணியில் கூடுதல் வீரராக ராகுல் திவேதியாவை சேர்த்து இருக்கவேண்டும். 

அவர், ஐ.பி.எல்.-லில் பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்' என்றார்.
*

Share this story