ரவீந்திர ஜடேஜாவால் அஸ்வினுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு – பேட்டிங்கில் சொதப்பல்..

By 
nn1

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதைத் தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது.

முதல்நாள் பெய்த மழையின் காரணமாக ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பீல்டிங் தேர்வு செய்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நந்த்ரே பர்கர் மற்றும் டேவிட் பெடிங்காம் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். மேலும், தென் ஆப்பிரிக்கா அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற்றார். பொதுவாக எந்த வெளிநாட்டு போட்டிகளிலும் அஸ்வின் பெரும்பாலும் அணியில் இடம் பெற்றிருக்கமாட்டார். ரவீந்திர ஜடேஜா தான் பிளேயிங் 11ல் இடம் பெற்றிருப்பார்.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக நேற்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருந்தார். இது குறித்து டாஸ் போடும் நிகழ்வின் போது பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ரவீந்திர ஜடேஜா ஃபிட்டாக இல்லாத காரணத்தினால், அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் பிசிசிஐயும் அதனை உறுதி செய்துள்ளது. இது குறித்து பிசிசிஐ கூறியிருப்பதாவது: போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காலையில் ரவீந்திர ஜடேஜா முதுகுப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்ட நிலையில் வலி இருப்பதாக கூறினார். ஆதலால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.

ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக அணியில் இடம் பெற்ற அஸ்வின், பேட்டிங்கில் 2 பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில், ஆட்டமிழந்துள்ளார். எனினும், பவுலிங்கில் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். தன்னை அணியில் சேர்த்ததற்கு தன்னால் முடிந்தவற்றை அணிக்காக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story