ஐபிஎல் கர்ஜனை: 1000 ரன்களை கடந்து அபிஷேக் சர்மா சாதனை..

By 
abi56

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் SRH அணியில் அபிஷேக் சர்மா முதல் அன்கேப்டு வீரராக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 23 ஆவது லீக் போட்டி முல்லன்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை கஜிஸோ ரபாடா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் கேட்ச் ஆனார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பஞ்சாப் வீரர்கள் ரெவியூ கேட்கவில்லை. அதன் பின்னர் டிவி ரீப்ளேயில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. எனினும், அவர் 21 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த எய்டன் மார்க்ரம் 2 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அபிஷேக் சர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் தான் 52 போட்டிகளில் விளையாடிய அபிஷேக் சர்மா 1070 ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 1000 ரன்களை கடந்த முதல் அன்கேப்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 63 எடுத்திருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா இந்தப் போட்டியில் 16 ரன்கள் எடுத்ததன் மூலமாக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய அபிஷேக் சர்மா 177 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹென்ரிச் கிளாசென் 9 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும், கடைசி வரையில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் அரைசதம் ஆகும் மேலும், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள முதல் அரைசதம் ஆகும்.

அப்துல் சமாத் 25 ரன்கள் எடுக்க, ஷாபாஸ் அகமது 14 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த ஜெயதேவ் உனத்கட் கடைசி பந்தில் ஒரு சிக்ஸ் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரபாடா ஒரு விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பின்னர் 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜானி பேர்ஸ்டோவ் 0, ஷிகர் தவான் 14, பிராப்சிம்ரன் சிங் 4, சாம் கரண் 29, சிக்கந்தர் ராஸா 28, ஜித்தேஷ் சர்மா 19 ரன்களில் வெளியேறினர்.

கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக 2 ரன்களில் பஞ்சாப் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்களில் வெற்றி பெற்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

Share this story