அபிஷேக் சர்மா அதிரடி: சிஎஸ்கேவை வென்ற ஹைதராபாத்..

By 
sarsa

நடப்பு ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டம் தான் ஹைதராபாத் அணியை வெற்றி பெற செய்தது.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அணியின் கேப்டன் கம்மின்ஸ், பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இதில் தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் ஸ்லிப் ஃபீல்டராக செயல்பட்ட மொயீன் அலி, டிராவிஸ் ஹெட்டின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆன கேட்ச்சினை மிஸ் செய்தார். மறுமுனையில் பேட் செய்த அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை சிஎஸ்கே அணிக்காக முகேஷ் சவுத்ரி வீசினார். அந்த ஓவரில் 27 ரன்கள் எடுத்தார் அபிஷேக் சர்மா. மூன்று சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார். இந்த ஓவரில் ஒரு நோ-பால் வீசி இருந்தார் முகேஷ்.

முதல் இன்னிங்ஸில் சிஎஸ்கே அணிக்காக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை சிஎஸ்கேவின் ஓப்பனர்களாக களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் விக்கெட்டானார் ரச்சின். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ருதுராஜ் 8வது ஓவரில் 26 ரன்களுடன் அவுட்டானார். 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழந்த சிஎஸ்கே 84 ரன்களை சேர்த்திருந்தது.

அஜிங்க்ய ரஹானே - ஷிவம் துபே இணை ரன்களை ஏற்றும் முனைப்பில் இறங்கினர். துபே 4 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டினார். பாட் கம்மின்ஸ் வீசிய 14வது ஓவரில் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் வெளியேறினார் துபே. அரைசதம் பதிவு செய்யும் வாய்ப்பை மிஸ் செய்தார்.

அவரைத் தொடர்ந்து ரஹானேவும் 35 ரன்களில் கிளம்பினார். 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 127 ரன்களைச் சேர்த்திருந்தது. ரவீந்திர ஜடேஜா - டேரில் மிட்செல் பொறுப்பான ஆடினாலும், நடராஜன் வீசிய பந்தில் கடைசி ஓவரில் 13 ரன்களில் அவுட்டானார் மிட்செல்.

இறுதியாக வந்த தோனி 1 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 31 ரன்களுடன் களத்தில் இருக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்த சிஎஸ்கே 165 ரன்களை சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஷஹபாஸ் அகமது, நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.

Share this story