தினேஷ் கார்த்திக் குறித்து, நடிகர் சித்தார்த் புகழாரம்..

By 
cita1

நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தினேஷ் கார்த்திக் குறித்து பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்தப் போட்டியின் முடிவில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்கை வீரர்கள் அனைவரும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர். ஐபிஎல்லில் இருந்து தினேஷ் கார்த்திக் இன்னும் ஓய்வை அறிவிக்காத நிலையில், வீரர்கள் அவரை வாழ்த்தியதை வைத்து, இதுவே அவரின் கடைசி போட்டி என்று கூறப்படுகிறது. ஆனால், தினேஷ் கார்த்திக் ஓய்வு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தினேஷ் கார்த்திக் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “சிறப்பாக சென்று வாருங்கள் நண்பா! நீங்கள் ஒரு மிகச்சிறந்த சாம்பியன். அனைத்து சாத்தியமான வழியிலும் ஒரு மிகச்சிறந்த வீரர்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் பலரும் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவது உறுதியாகியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், 60 டி20 போட்டிகள் என்று 180 போட்டிகளில் ஆடியுள்ளார்.

Share this story