தாய்லாந்தை வீழ்த்தி, முதல் முறையாக ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியா..

By 
tail

கடந்த 13 ஆம் தேதி முதல் மலேசியாவின் சிலாங்கூர், ஷா ஆலம் ஆகிய பகுதிகளில் பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா, தென் கொரியா, சீனா, மலேசியா என்று மொத்தம் 7 அணிகள் இடம் பெற்று விளையாடின.

இதில், இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து இன்று இறுதிப் போட்டி நடந்தது. இதில், இளம் வீராங்கனையான அன்மோல் கார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றது. தாய்லாந்து 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. பிவி சிந்து நீண்ட நாட்கள் ஓய்விற்கு பிறகு இந்த தொடரில் இடம் பெற்று இந்திய அணியை வழிநடத்தினார். பிவி சிந்து உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள சுபனிடா கேத்தோங்கை 21-12 21-12 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார். 

அதன் மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16 18-21 21-16 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

இதையடுத்து நடந்த 2ஆவது ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் முன்னாள் உலக சாம்பியனான நோஜோமி ஒகுஹாராவுக்கு எதிராக அஷ்மிதா சாலிஹா வெற்றி பெற்றார். இதையடுத்து தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்துவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஷ்மிதா 11-21 14-21 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தார்.

தேசிய சாம்பியனான இளம் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21 9-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர். இதன் மூலமாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 2-2 என்று சமநிலையில் இருந்தன. கடைசியாக வெற்றை தீர்மானிக்கும் 5ஆவது போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அன்மோல் கர்ப் 21-14 21-9 என்ற கணக்கில் தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார்.

இதன் மூலமாக இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று சாம்பியனானது. இதற்கு முன்னதாக கடந்த 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இந்திய ஆண்கள் அணி ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. இந்த நிலையில் தான் முதல் முறையாக பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி தங்கம் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Share this story