பாரிஸ் ஒலிம்பிக்கில் அட்டாக் ஆட்டம்...” - தயாராகும் லோவ்லினா அனுபவ பகிர்வு..

By 
lovli1

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன். ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை விளையாட்டில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை அப்போது அவர் படைத்தார்.

வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஹெவி வெயிட் பிரிவில் லோவ்லினா விளையாட உள்ளார். 26 வயதான அவர், இளம் இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக உள்ளார். அதற்காக சிறப்பான முறையில் தயாராகி வருகிறார். அந்த அனுபவம் குறித்து அவர்,

“ஒலிம்பிக் களம் சவால் நிறைந்தது. அழுத்தமும் சம அளவில் இருக்கும். அதனை நான் கடந்து வர வேண்டும். கடந்த ஒலிம்பிக்கில் நல்ல அனுபவம் கிடைத்தது. வெண்கலம் வென்றிருந்தேன். இந்த முறை எனது பதக்கத்தின் நிறத்தை மாற்ற விரும்புகிறேன்.

75 கிலோ எடைப் பிரிவுக்கு மாறிய பிறகு ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றுள்ளேன். ஆசிய போட்டிகளில் வெள்ளி வென்றேன். ஒட்டுமொத்தமாக இந்த மாற்றம் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. முன்பு தடுப்பாட்டம் அதிகம் ஆடுவேன். இப்போது அட்டாக் செய்து ஆடுகிறேன். எனக்கு எதிராக ஒலிம்பிக்கில் ஆட உள்ளவர்கள் குறித்து அறிந்து வருகிறேன். அதன் மூலம் அவர்களுக்கு எதிராக என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

துருக்கியில் குறுகிய கால பயிற்சி கிடைத்தது. அதில், இத்தாலி மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்தவர்களுடன் ஸ்பேரிங் செய்தேன். அது நிச்சயம் பலன் தரும். பாரிஸ் நகருக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சுமார் 20 நாட்கள் முன்னதாக நாங்கள் செல்ல உள்ளோம். எனது குடும்பத்தின் ஆதரவும் சிறப்பாக உள்ளது. கடந்த முறை அம்மா மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இப்போது பூரண குணம் அடைந்துள்ளார்.

ஒலிம்பிக்கிற்கு உடல் அளவில் மட்டுமல்லாது மனதளவிலும் தயாராகி வருகிறேன். போட்டி தொடங்க இன்னும் மூன்று மாத காலம் இருந்தாலும் எனது கவனம் முழுவதும் அதில் தான் உள்ளது. உத்வேகம் தரும் புத்தகங்களை படிப்பது, பிரார்த்தனை செய்வது, தியானம் மேற்கொள்வது, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை ஓய்வு நேரங்களில் மேற்கொள்வேன்” என லோவ்லினா தெரிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Share this story