ஆஸ்திரேலிய அணி என்னை ஏமாற்றிவிட்டது: அஸ்வின் பேச்சு 

By 
aswin4

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தன்னை ஏமாற்றி விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சானலில் கூறியுள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணியின் தோல்வி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை நொறுங்க செய்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சானலில் கூறியிருப்பதாவது:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அனைத்து போட்டிகளுக்கும் ராகுல் திராவிட், ரோஹித் சர்மா அருமையான திட்டங்கள் வகுத்துவைத்திருந்தனர். எந்தெந்த வீரர்கள் எந்த ஆட்டங்களில் இடம் பெற வேண்டும் என தெளிவான திட்டங்கள் கொண்டிருந்தனர். இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்திருக்கலாம் என அனைவரும் கூறுகிறார்கள்.

அவர், சுயநலம் இல்லாமல் விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே அவரது எண்ணம் அணிக்கு விரைவான தொடக்கம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. எப்படி சதம் அடிக்க வேண்டும் என ரோஹித் சர்மாவுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர், பல்வேறு ஆட்டங்களில் செய்துள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயர் விக்கெட் முக்கியமான கட்டத்தில் சரிந்தது. ஏனெனில் உலகக் கோப்பை தொடர் முழுவதுமே ரோஹித் சர்மா அல்லது ஷுப்மன் கில் அமைத்துக் கொடுத்த தொடக்கங்களை பல்வேறு முறை ஸ்ரேயஸ் ஐயர் முன்னெடுத்துச் சென்றுள்ளார். சுழற்பந்து வீச்சில் அதிக ரன்கள் எடுக்கக்கூடியவர். ஃபுல் ஷாட்டில் அவர், அதிக வேலைகளும் செய்துள்ளார். இலக்கை துரத்தும் போது ஸ்ரேயஸ் ஐயர் அற்புதமாக செயல்படக்கூடியவர். இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸிடம் அவர், விரைவாக வீழ்ந்தது கடும் பின்னடைவை கொடுத்தது.

இருப்பினும் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடியது. அவர்களின் உத்திகளைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆஸ்திரேலியா என்னை தனிப்பட்ட முறையில் ஏமாற்றிவிட்டது. ஏனெனில் அவர்களின் வரலாறு பார்க்கையில், பெரிய அளவிலான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பிறகு பேட்டிங்கே செய்திருந்தனர். டாஸ் போடுவதற்கு முன்பே ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கையே முதலில் தேர்வு செய்ய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன்.

ஏனெனில் அகமதாபாத் ஆடுகளத்துக்கு பயன்படுத்தப்பட்ட கருப்பு மண், ஒடிசாவில் இருந்து கொண்டுவரப்பட்டது. மற்ற கருப்பு மண் ஆடுகளங்களில் பந்துகள் முட்டு அளவு உயரத்துக்கு எழுந்து வரும். ஆனால் இந்த மண்ணில் பந்துகள் குதிகால் உயரத்துக்கு மேல் எழுந்து வராது. பந்துகள் எகிறி வருவது குறைவாகவே இருக்கும். அதேவேளையில் ஆடுகளம் சிதையாது. ஏனெனில் இந்த வகையிலான மண் ஈரப்பதத்தை வெளியே விடாது.

போட்டியின் நடுவே ஆடுகளத்தை சென்று பார்வையிட்டேன். அப்போது ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து பேசினேன். எப்போதும் நீங்கள் டாஸ் வென்றால் பேட்டிங்கை தானே தேர்வு செய்வீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளோம். இருதரப்பு தொடர்களிலும் நீண்ட காலம் விளையாடி உள்ளோம். இந்த அனுபவங்களின் அடிப்படையில் சிவப்பு மண் ஆடுகளம் சிதையும். ஆனால் கருப்பு மண் ஆடுகளம் மின்ளொளியின் கீழ் பேட் செய்வதற்கு சிறப்பாக இருக்கும்.

சிவப்பு மண் ஆடுகளத்தில் பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்தாது. கருப்பு மண் ஆடுகளத்தில் பிற்பகலில் பந்துகள் திரும்பும். ஆனால் இரவு நேரத்தில் ஆடுகளம் சிமெண்ட் தளம் போன்று மாறிவிடும் என்று பதில் கூறினார். இதை கேட்டதும் நான் வாயடைத்து போனேன். அந்த அளவுக்கு அவர்கள், ஆடுகளத்தை புரிந்து வைத்துள்ளனர். அதேவேளையில் பாட் கம்மின்ஸ் திட்டங்களை களத்தில் செயல்படுத்திய விதம் பாராட்டக்கூடியது.

உலகக் கோப்பையில் தொடக்க போட்டிகளில் கம்மின்ஸ் பந்து வீச்சில் கஷ்டப்பட்டார். ஆனால் கடைசி 4 முதல் 5 போட்டிகளில் அவர்,மீண்டு வந்தார். 50 சதவீத பந்துகளை கட்டர்களாக வீசினார். இறுதிப் போட்டியில் அவர், ஆஃப் திசையில் 4 பேரையும், லெக் திசையில் 5 பேரையும் என நிறுத்தி சுழற்பந்து வீச்சுக்கான பீல்டிங்கை அமைத்து பந்து வீசினார். 10 ஓவர்களில் 3 பந்துகளை மட்டுமே அவர், ஸ்டெம்புகளுக்கு முன்னால் 6 மீட்டர் மார்க்கில் வீசினார். தனது 10 ஓவர்களிலும் அவர், மிட் ஆஃப் திசையில் பீல்டரை நிறுத்தவில்லை.

பெரும்பாலான நேரங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை அவர், டிரைவ் செய்யவிடவில்லை. எவ்வளவுதான் பீல்டிங்கை சிறப்பாக அமைத்தாலும் பேட்ஸ்மேன்கள் ஒரு சில பவுண்டரிகளை அடிப்பார்கள். ஆனால் அதை ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களும், பீல்டிங் வியூகமும் அனுமதிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக அவர்கள் திட்டங்களை சரியாக களத்தில் அமல்படுத்தினர்.

துரத்தலின் போது ஆஸ்திரேலிய அணி விரைவாக 3 விக்கெட்களை இழந்த போதுகூட நம்பிக்கை இருந்தது. ஆனால் இறுதியில் வருத்தத்துடன் தொடரை முடித்தோம். நாங்கள் மட்டும் அல்ல கோடிக்கணக்கான ரசிகர்களும் மனம் உடைந்துவிட்டனர். இறுதிப் போட்டியை தவிர்த்து இந்த தொடர் முழுவதுமே சிறப்பாகவே விளையாடினோம். நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Share this story