கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றிய வங்கதேசம்

By 
vang1

கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில் இந்தியா தான் அதிக முறை டிராபியை வென்றுள்ளது. 

இதுவரையில் நடந்த 9 தொடர்களில் இந்தியா 8 முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன. 10ஆவது சீசனுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரானது கடந்த 8ஆம் தேதி துபாயில் தொடங்கியது.

இந்த தொடரில் இந்தியா யு19, பாகிஸ்தான் யு19, ஆப்கானிஸ்தான் யு19, நேபாள் யு19 ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், வங்கதேசம் யு19, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யு19, இலங்கை யு19 மற்றும் ஜப்பான் யு19 ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்று விளையாடி வந்தன.

இந்தியா யு19 விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், வங்கதேச யு19 அணிக்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா யு19 தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் யு19 அணியானது 107 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து, வங்கதேச யு19 மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யு19 அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று துபாயில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யு19 அணியானது பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச யு19 அணியில் விக்கெட் கீப்பரான அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி கடைசி வரை விளையாடி 149 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 129 ரன்கள் குவித்தது.

சவுத்ரி முகமது ரிஸ்வான் 60 ரன்களும், அரிஃபுல் இஸ்லாம் 50 ரன்களும் எடுத்தனர். இறுதியாக வங்கதேச யு19 அணியானது 50 ஓவர்கள் முழுவதும் விளையாடி 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது. பந்து வீச்சில் ஐக்கிய அரபு அணியில் அய்மன் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர், கடின இலக்கை துரத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யு19 அணியில் துருவ் பராசர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 25 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. சீரான இடைவெளியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

இறுதியாக 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து 195 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக வங்கதேச யு19 அணியானது முதல் முறையாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Share this story