இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை: சாதனை வெற்றிக்காக பிசிசிஐ சர்ப்ரைஸ்..

By 
pccii

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

ஒரு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின் மீதமுள்ள நான்கு போட்டிகளையும் வென்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சாதனையை 112 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. முன்னதாக, 1912-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து எதிரான தொடரில் இங்கிலாந்து அணி இதே சாதனையை படைத்திருந்தது.

இப்படி சரித்திர வெற்றிபெற்ற இந்திய அணிக்கு, வெற்றிபெற்ற சில நொடிகளில் சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. அது டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊக்கத் தொகையே. அதன்படி, ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆடும் லெவனில் இடம்பெறாமல் அணியில் இடம்பெறும் வீரருக்கு ரூ.22.5 லட்சம் வழங்கப்படும்.

அதுவே 50% போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடும் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். ஆடும் லெவனில் இடம்பெறாமல் அணியில் இடம்பெறும் வீரருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

'டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்' என்கிற பெயரில் இது 2022 - 23 சீசனில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதற்காக ரூ.40 கோடியை பிசிசிஐ ஒதுக்கியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையாக அதனை ஊக்கப்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களில் இந்திய வீரர்கள் சிலர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்த நிலையில் அவர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Share this story