கிரிக்கெட் தர்பார்: ஹர்திக் பாண்ட்யாவை வாங்குவதில் சிக்கல்; அம்பானிக்கு வந்த பணப்பிரச்சனை; 2 வீரர்கள் வெளியேற்றம்..

By 
amam1

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பம் ஐபிஎல் விதிகளால் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் அந்த அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் அடுத்த மாதம் ஏலம் நடக்க உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஐபிஎல் அணிகள் எந்த வீரரையாவது அணியில் இருந்து வெளியேற்ற நினைத்தால் அதை செய்து கொள்ளலாம். அது போல, ஐபிஎல் அணிகள் வீரர்களை தங்களுக்குள் அணி மாற்றிக் கொள்ளலாம். 

இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்க மும்பை இந்தியன்ஸ் களமிறங்கி உள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு முன் சில வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால் மும்பை அணி பாண்டியாவை விடுவித்தது. அதை பயன்படுத்தி புதிதாக உருவாகி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை வாங்கியது.

 2022 ஐபிஎல் தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அப்போது கோப்பையையும் வென்று கொடுத்தார். அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்றார். ஆனாலும், குஜராத் அணி உரிமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த அணியில் இருந்து விலகி தான் முதன் முதலில் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆகி 2021 வரை இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப விரும்பினார் ஹர்திக் பாண்டியா. அதற்காக அவர் நேரடியாக அம்பானி குடும்பத்தினரிடம் பேசி இருக்கிறார். 

அவர்களும் அவரை மும்பை அணிக்கு அழைத்து வர என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என உறுதி அளித்தனர். இதை அடுத்து ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் உரிமையாளர்களிடம் இது குறித்து பேசி இருக்கிறார். அதன் முடிவில் ஐபிஎல் விதிகளின்படி ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு அணி மாற்றம் செய்தால் அவரது ஐபிஎல் மதிப்புக்கு இணையான பணம் அல்லது அதற்கு ஈடான வீரர்களை மும்பை அணி குஜராத் அணிக்கு அளிக்க வேண்டும்.

குஜராத் அணி பாண்டியாவை அளித்து விட்டு அவருக்கு ஈடான பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஐபிஎல் அணிக்கும் வீரர்களை வாங்க எவ்வளவு பணம் செலவு செய்யலாம் என்பதற்கு ஐபிஎல் விதிகள் உள்ளன. 

அதன்படி, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 50 லட்சம் மட்டுமே கையிருப்பில் உள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியாவை 15 கோடி கொடுத்து வாங்கி இருந்தது குஜராத் அணி. அதனால், தற்போது பாண்டியாவை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் 15 கோடி மதிப்பு கொண்ட வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும். 

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக மதிப்புள்ள வீரர்கள் என்றால் அது ரோஹித் சர்மா (16 கோடி), இஷான் கிஷன் (15.25 கோடி), கேமரான் கிரீன் (17.50 கோடி), பும்ரா (12 கோடி), சூர்யகுமார் (8 கோடி), ஜோப்ரா ஆர்ச்சர் (8 கோடி), டிம் டேவிட் (8.25 கோடி).

இவர்களில் கேமரான் கிரீன், ஜோப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட் ஆகிய மூவரில் ஒருவர் அல்லது இருவரை நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

ஒருவேளை வீரர்களை நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டால், பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை.

Share this story