கிரிக்கெட் கெத்து : தொடர்ந்து 12 ஓவர்களை வீசிய வெறித்தனம்; யார் தெரியுமா.? 
 

By 
fireball

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஷமார் ஜோசப், காலில் ஏற்பட்ட காயத்துடன் 12 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் கோட்டை என்று கருதப்படும் காபா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மிகப்பெரிய தாக்குதலை நடத்திவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியை முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சாதித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார் இளம் வீரரான ஷமார் ஜோசப்.

முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய ஷமார் ஜோசப், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் காரணமாக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார். 2வது இன்னிங்ஸின் போது ஷமார் ஜோசப் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து அவரின் காலினை பதம் பார்த்தது.

இதனால் நிற்கவே முடியாத நிலையில், மற்ற வீரர்களின் உதவியுடன் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார் ஷமார் ஜோசப். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஷமார் ஜோசப் பவுலிங் செய்வதே கடினமாக விஷயமாக பார்க்கப்பட்டது. இதையடுத்து 4வது நாள் ஆட்டம் தொடங்கிய போது ஷமார் ஜோசப் பவுலிங் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென பவுலிங் செய்ய வந்த அவர், தொடர்ச்சியாக 12 ஓவர்களை வீசியுள்ளார்.

அதிலும் விக்கெட் மாற்றி விக்கெட் என்று அவரின் வேகத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர். இன்னும் சொல்லப்போனால் காயத்துடன் பவுலிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் ஷமார் ஜோசப். உலக டெஸ்ட் சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய புதிய வரலாற்றை எழுதியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஓராண்டுக்கு முன் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்த ஷமார் ஜோசப், கிரிக்கெட் விளையாடுவதற்காக பணியை விட்டார். அதன்பின் சிபிஎல் தொடரில் அனாலிஸ்ட் பிரசன்னாவின் கண்களில் பட, நேரடியாக கயனா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கு அவரின் திறமையை வெளிப்படுத்த, ஓராண்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணின் நாயகனாக உருவாகியுள்ளார் ஷமார் ஜோசப்.

Share this story