சென்னையில், நாளை முதல் ஆகஸ்ட் 15-வரை கிரிக்கெட்

By 
Cricket in Chennai from tomorrow till August 15

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் போட்டி 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறை (2017, 2019 ) டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016 ), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

சிதம்பரம் மைதானம் :

5-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை  தொடங்குகிறது. ஆகஸ்ட் 15-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

அனைத்து ஆட்டங்களும் (மொத்தம் 32) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக, ஒரே இடத்தில் போட்டி நடத்தப்படுகிறது. மற்ற நகரங்களில் போட்டி நடைபெறவில்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இந்தப் போட்டி நடைபெறுகிறது.

டி.என்.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீசெம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

பிளே ஆப் சுற்று :

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப்  சுற்றுக்கு முன்னேறும்.

ஆகஸ்ட் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது. 10 -ந் தேதி பிளேஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. ஆகஸ்ட் 15 ந் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.

கோவை-சேலம் :

நாளைய தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. எந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வீரர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஏற்கனவே, வென்ற அணி டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றுமா? புதிய அணி பட்டம் பெறுமா ? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது முறையாக, சாம்பியன் பட்டத்தைப் பெறும் ஆர்வத்தில் உள்ளது. மதுரை பாந்தர்ஸ் 2-வது தடவையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

தொடர்ச்சியாக, 2 முறை இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்த திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட மற்ற அணிகள், முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற காத்திருக்கின்றன.

நாளைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட ஸ்டார் நெட் வொர்க் சேனல்களில் டி.என்.பி.எல். போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

7 தினங்களில் மட்டும் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். மற்ற தினங்களில், ஒரே ஒரு போட்டி நடக்கிறது. 2 போட்டி நடைபெறும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். ஒரே ஒரு போட்டி நடைபெறும் நாட்களில் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 

Share this story