கிரிக்கெட் சர்க்கார் : தென்ஆப்பிரிக்காவை தெறிக்க விட்டு, புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி?

By 
Cricket Sarkar Will the Indian team make new history by beating South Africa

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோகன்னஸ் பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது.

2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து, இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு முக்கியம் :

தென் ஆப்பிரிக்க மண்ணில், இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அங்கு 6 முறை டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. ஒரு தடவை தொடர் சமநிலையில் முடிந்தது.

இதனால், தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக, தென் ஆப்பிரிக்காவில் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

விகாரி-கோலி :

முதுகுவலி காரணமாக, கடந்த டெஸ்டில் விளையாடாத கேப்டன் விராட் கோலி நாளைய போட்டியில் ஆடுவார். அவர் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். கோலி ஆடும் பட்சத்தில், விகாரி நீக்கப்படுவார்.

வேகப்பந்து வீரர் முகமது சிராஜ் காயத்தில் உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் இடம் பெறலாம். மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது. 

ரகானேவும், புஜாராவும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அணிக்கு சாதகமான நிலையாகும். அதேநேரத்தில் ரி‌ஷப் பண்டின் ஆட்டம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால், இந்த டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றலாம். நல்ல வாய்ப்பை வீணடித்து விடக்கூடாது.

முதல் டெஸ்டில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்கா 2-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எல்கர் தலைமையிலான அந்த அணி இந்தியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் எல்கர், பவுமா ஆகியோரும் பந்துவீச்சில் ரபடா, நிகிடி, மார்கோ ஜான்சென் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

42-வது டெஸ்ட் :

இரு அணிகளும் நாளை மோதுவது 42-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 41 போட்டியில் இந்தியா 15-ல், தென் ஆப்பிரிக்கா 16-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 டெஸ்ட் டிரா ஆனது.

இந்திய நேரப்படி, பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
*

Share this story