கிரிக்கெட் டென்ஷன்: இந்தியாவின் தோல்விக்கு காரணமே அதுதான்..
 

By 
ss22

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்து வரை போராடி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணமே கேப்டன் சூர்யகுமார் செய்த முக்கிய தவறு தான்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. பேட்டிங் பிட்ச்சில் நடைபெற்ற போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக 222 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் இது நல்ல ஸ்கோர் என்றாலும், ஆஸ்திரேலிய அணியாலும் இந்த ஸ்கோரை எட்ட முடியும் என்ற நிலையே இருந்தது.

அதை மனதில் கொண்டே இந்திய அணியும் பந்துவீசியது. ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர்கள் ஆரோன் ஹார்டியை 16 ரன்னிலும், ட்ராவிஸ் ஹெட்டை 35 ரன்னிலும் வெளியேற்றியது இந்தியா. முதல் போட்டியில் சதம் அடித்த ஜோஷ் இங்லிஸ் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஐந்தாவது வரிசையில் இறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டோனிஸ் 17 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்த்தியது இந்தியா.

அதன் பின் கிளென் மேக்ஸ்வெல் - மேத்யூ வேட் ஜோடி சேர்ந்தனர். இங்கே தான் சூர்யகுமார் யாதவ் அந்த தவறை செய்தார். 13 வது ஓவரின் முடிவில் ஸ்பின்னர் அக்சர் பட்டேல் ஸ்டோனிஸ் விக்கெட்டை வீழ்த்தி இருந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து 15வது ஓவரை வீசும் வாய்ப்பை அளித்து இருக்க வேண்டும். அதை செய்யாமல் 15வது ஓவரை வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வசம் அளித்தார் சூர்யகுமார். அதன் பின் தொடர்ந்து வேகப் பந்துவீச்சாளர்களையே பயன்படுத்திய அவர், 19வது ஓவரை அக்சர் பட்டேல் வசம் அளித்தார். அது பெரிய தவறாக மாறியது. அக்சர் பட்டேல் ஓவரில் 22 ரன்கள் குவித்தது மேக்ஸ்வெல் - வேட் ஜோடி.

இந்திய அணி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து இந்தப் போட்டியில் ஆடியதால் ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாத நிலையில், 20 ஓவர்களையும் இந்த ஐந்து பந்துவீச்சாளர்களே வீசியாக வேண்டிய நிலை இருந்தது. அப்படியெனில் ஸ்பின்னரை டி20 போட்டியில் கடைசி 2 - 3 ஓவர்களில் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்த முடிவாக இருந்திருக்கும். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களை முன்பே பயன்படுத்தி விட்டு 19 வது ஓவரை ஸ்பின்னரிடம் கொடுத்தது பெரிய தவறாக மாறியது.

19வது ஓவரில் இஷான் கிஷன் செய்த சொதப்பல்கள் தனிக் கதை. அவர் ஸ்டம்பிங் செய்ததாக அவுட் கேட்டு, பின்னர் அவர் விக்கெட் கீப்பிங் கிளவுஸ் பந்து வரும் முன்னே ஸ்டம்ப்புக்கு முன்னே இருப்பதை கண்டுபிடித்த அம்பயர் நோ பால் கொடுத்தார். அதனால், அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் ஆகி அதில் மேக்ஸ்வெல் சிக்ஸ் அடித்தார். இப்படியாக சூர்யகுமார் ஓவரை அளிப்பதில் செய்த தவறு பூதாகரமாக மாறி இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Share this story