கிரிக்கெட் டுடே: சுருண்டது இங்கிலாந்து..434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

By 
ghjk

இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 445 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தது. பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 91 ரன்களில் ரன் அவுட்டானார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 214 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்ஃபராஸ் கானும் தன் பங்கிற்கு 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியாக இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக இங்கிலாந்திற்கு 557 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு அடி மேல் அடி விழுந்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 4 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். ஜாக் கிராவ்லி 11 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த ஆலி போப் 3, ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் ஜடேஜா பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

பென் ஃபோக்ஸ் 16 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரெஹான் அகமது ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். டாம் ஹார்ட்லி 16 ரன்களில் வெளியேற, கடைசியாக மார்க் வுட் 33 ரன்கள் எடுத்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இங்கிலாந்து 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்து 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.

Share this story