கிரிக்கெட் டுடே: ரூ. 2 கோடிக்கு டெல்லி அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனை..

By 
bel1

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான ஏலத்திற்கு மட்டும் 165 வீராங்கனைகள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால், இதிலிருந்து வெறும் 30 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்படுகின்றனர்.

இந்த 30 வீராங்கனைகளில் 9 வீராங்கனைகள் வெளிநாட்டு வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக 3 மணிக்கு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் தொடங்கியது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2ஆவது முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.

பர்ஸ் தொகை:

குஜராத் ஜெயிண்ட்ஸ் - ரூ.5.95 கோடி

யுபி வாரியர்ஸ் - ரூ.4 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.3.35 கோடி

டெல்லி கேபிடல்ஸ் - ரூ.2.25 கோடி

மும்பை இந்தியன்ஸ் – ரூ.2.1 கோடி

இன்று நடந்த ஏலத்தில் முதல் வீராங்கனையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்டு ரூ.1 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் மூலமாக ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்து வீராங்கனையான டேனியல் வியாட் ரூ.30 லட்சத்திற்கு யுபி வாரியர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இந்திய வீராங்கனைகளான வேதா கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஃபுல்மாலி, மோனா மேஷ்ரம் ஆகியோர் ஏலம் எடுக்கப்படவில்லை. மேலும், பூனம் ராவுத், தேவிகா வைத்யா ஆகியோரும் எந்த அணி சார்பிலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜார்ஜியா வேர்ஹாம் ரூ.40 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் அன்னபெல் சதர்லேண்ட் ரூ.2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டார். இந்திய வீராங்கனை மேக்னா சிங் ரூ.30 லட்சத்திற்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னில் இஸ்மாயில் ரூ.1.20 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ரூ.30 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

Share this story