கிரிக்கெட் டுடே : தென்ஆப்பிரிக்காவுக்கு, இந்திய அணி இன்று பதிலடி கொடுக்குமா? : ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Cricket Today Will India retaliate against South Africa today  Fans expect

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி, இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

7 முறை :

இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே நாடு தென்ஆப்பிரிக்கா தான். 7 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வெறுங்கையுடன் திரும்பிய இந்திய அணி, கடைசியாக 2018-ம் ஆண்டில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்திருந்தது. 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்திய இந்திய அணி தென்ஆப்பிரிக்க மண்ணிலும் மோசமான வரலாற்றை மாற்றி காட்டுமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்திய அணி சமீபத்தில் உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்துடன் வந்துள்ளது. ஆனால், தென்ஆப்பிரிக்காவில் சவாலே வேகப்பந்து வீச்சு தான்.

ஆடுகளம் :

பொதுவாக, இங்குள்ள புல்தரை ஆடுகளங்களில் பந்து அதிவேகத்தில் எகிறும். உயிரோட்டமான இத்தகைய ஆடுகளத்தில் பந்தின் நகரும் தன்மைக்கு (ஸ்விங்) ஏற்ப கணித்து செயல்பட வேண்டும். 

நெஞ்சு அளவுக்கு எழும்பி வரும் பந்துகளையோ அல்லது ஆப்-ஸ்டம்புக்கு சற்று வெளியே சீறும் பந்துகளையோ, சரியாக எதிர்கொள்ள தவறினால், அது பேட்டின் விளிம்பில் பட்டு, ஸ்லிப் பகுதியில் நிற்கும் பீல்டர்களின் கைக்கு சென்று விடும். 

அதனால், பேட்ஸ்மேன்கள் அவசரமின்றி நிலைத்து நின்று ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 

காஜிசோ ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியரின் தாக்குதலை சாதுர்யமாக சமாளித்து விட்டால் கணிசமாக ரன்கள் குவித்து விடலாம். 

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

இந்திய நேரப்படி, பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
*

Share this story