கிரிக்கெட் கிட்டில் 27 சரக்கு பாட்டில்கள், 2 பீர் கேஸ்கள் எடுத்து வந்த கிரிக்கெட் வீரர்கள்..

By 
sos1

சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து 23 வயதுக்குட்பட்ட சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியிலிருந்து 27 மதுபாட்டில்கள் மற்றும் 2 பீர் பெட்டிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்னல் சிகே நாயுடு டிராபி தொடரின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியானது கடந்த 7 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் சௌராஷ்டிரா, சண்டிகர், சிக்கிம், மேகாலயா, திரிபுரா, ஜார்க்கண்ட், அசாம், பெங்கால், உத்தரகாண்ட், குஜராத், ஒரிசா, கர்நாடகா, ஹைதராபாத், ஹிமாச்சல் பிரதேசம், விதர்பா, மத்தியப்பிரதேசம், பரோடா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இதில் சௌராஷ்டிரா மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையிலான போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த போட்டியில் சௌராஷ்டிரா அணியானது சண்டிகரை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து சௌராஷ்டிரா கிரிக்கெட் வீரர்கள் ராஜ்கோட் புறப்பட்டனர். அப்போது சண்டிகர் விமான நிலையத்தில் அவர்கள் கொண்டு வந்த லக்கேஜ் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில், சில வீரர்களின் கிட் பேக்கில் மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரஷாம் ராஜ்தேவ், ரக்சித் மேத்தா, சமர்த் கஜ்ஜர், ஸ்மித்ராஜ் ஜலானி மற்றும் பார்ஷ்வராஜ் ராணா ஆகியோர் கொண்டு வந்த வந்த கிட் பேக்கில் 27 மதுபான பாட்டில்களும், 2 பீர் பெட்டிகளும் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு சுங்க அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, சண்டிகரில் நடந்த சம்பவம் எங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சௌராஷ்டிரா ஒழுங்கு குழு, உச்ச கவுன்சில் இணைந்து முறையான விசாரணை மேற்கொண்டு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story