149-லிருந்து 174 ரன்கள் எடுத்த டெல்லி அணி: கடைசி ஓவரில் வாரி வழங்கிய வள்ளல் ஷர்ஷல் படேல்..

By 
padel

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 2ஆவது போட்டி தற்போது மொஹாலியிலுள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் 20, டேவிட் வார்னர் 29, ஷாய் ஹோப் 33 ரன்கள் எடுத்தனர். 454 நாட்களுக்கு பிறகு வந்த ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இம்பேக்ட் பிளேயராக வந்த அபிஷேக் ஜூரெல் களத்தில் இருந்தார். அந்த ஓவரில் மட்டுமே அபிஷேக் ஜூரெல் 4, 6, 4, 4, 6, 1 என்று வரிசையாக 25 ரன்கள் எடுத்துக் கொடுக்க டெல்லி கேபிடல்ஸ் 174 ரன்கள் குவித்தது. கடந்த சீசன் வரை ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த ஹர்ஷல் படேலை இனிமேல் அணிக்கு தேவையில்லை என்று அணி அவரை விடுவித்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ.11.75 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

ஆனால், அவர் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதற்கும் மேலாக இந்தப் போட்டியில் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். டேவிட் வார்னர் மற்றும் ரிஷப் பண்ட் விக்கெட்டை கைப்பற்றிய ஹர்ஷல் படேல் 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்திருந்தார். கடைசி ஓவரில் அவர் கொடுத்த 25 ரன்களால் 4 ஓவரில் 2 விக்கெட் எடுத்து 47 ரன்கள் வாரி வழங்கியுள்ளார்.

அவர் கொடுத்த 25 ரன்களால் டெல்லி 174 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைந்தால் அதற்கு முக்கிய காரணமாக ஹர்ஷல் படேல் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story