இந்திய வீரர்களை இரு அணியாக பிரித்து, பயிற்சி ஆட்டங்கள்..
 

By 
Divide the Indian players into two teams and practice matches ..

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இந்திய வீரர்களை இரு அணியாக பிரித்து நடத்தப்படும் பயிற்சி ஆட்டங்கள் டர்ஹாமில் நடக்கிறது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. 

விராட்கோலி் அதிருப்தி :

தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களுக்கு 3 வாரங்கள் ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போதிய கால அவகாசம் இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக தங்களை சிறந்த முறையில் தயார்படுத்திக்கொள்ள பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டதாகவும், தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் கவுண்டி அணிகளுக்கு எதிராக ஓரிரு பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தரும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கேட்டு பார்த்தது. 

ஆனால், இங்கிலாந்தில் முதல்தர கிரிக்கெட் வீரர்கள் யாரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதில்லை. அதனால் பயிற்சி ஆட்டத்துக்கு திட்டமிட வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கைவிரித்து விட்டது.

தேர்வுக் குழுவினர் :

இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இந்திய அணி கவுண்டி அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு இல்லை. 

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை காரணமாக, முதலாவது டெஸ்டுக்கு முன்பாக இந்திய அணியினரே தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து இரண்டு 4 நாள் ஆட்டங்களில் விளையாடுவார்கள். 

இந்த ஆட்டங்கள் டர்ஹாமில் நடைபெறும்’ என்றார். இந்திய டெஸ்ட் அணியில் 20 வீரர்களும், 4 வலை பயிற்சி பவுலர்களும் உள்ளனர். அவர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் இடம் பெறுவார்கள்.

இதற்கிடையே, டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்காக இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா, சீனியர் தேர்வாளர் சுனில் ஜோஷி ஆகியோர் இங்கிலாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். 

ஆனால், கடுமையான கொரோனா தனிமைப்படுத்தும் விதி எதிரொலியாக அங்கு எந்த தேர்வாளர்களும் செல்லமாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Share this story